மழைத்துளியை இடுப்பில் தாங்கி
முத்த மழையில் நனைவதை
நான் நெருங்கி பார்க்கையில்
வெட்கத்தில் பச்சையாய் சிரிக்கிறது
பசும் புல் !
அதன் பசுமை நிறத்தில் நான்
என்னை தொலைத்து நிற்கையில்
எல்லாம் ஒளிக்கதிரின் விளையாட்டு
என காதில் சொல்கிறது
அறிவு !
தன் மனதின் நிறத்தை
தன் இரு கைகள் விரித்து
நம் கண்முன் காண்பிக்கிறாள்
பூமித்தாய் என்கிறது
மனம் !
இரவுப்பொழுதில் கருகி
போய் விடுமோ அவள்மனம்
நமட்டு சிரிப்புடன்
நக்கலாய் கேட்கிறது
அறிவு !
உறங்கும்பொழுது உடைகளாய்
உடுத்தி இருக்கும் கூந்தலின்
நிறம் என்று கோபமாய் கூறுகிறது
மனம் !
இம்சை தாங்காமல்
இமைகளை மூடினேன்
ஒரே நிசப்தம்
பசும்புல் சொன்னது
உங்கள் பார்வை பிடித்திருப்பதாய் !
பார்வைதான் காரணம் என்று
பாடுபொருளே சொல்ல
மனது மௌனமானது !
அறிவு ஆறுதலாய்
அதன் கையை பற்றியது !
இரண்டும் சேர்ந்து
நிறங்களை புறக்கணித்தன ...
இமையை திறந்தேன்
எதிரே புல்
கருப்பு வெள்ளையாய் !
மருத்துவர் மனைவியிடம்
சொல்கிறார்
எனக்கு நிறக்குருடு என்று !!!