காகித வீதியில் கடை விறிக்க கை எடுக்கும் போதெல்லாம் வார்த்தைகள் வழுக்கி வாய்க்குள்ளேயே விழுந்து விடுகிறது உன் வில்லிடை அசைவில் !
என் மௌனத்தின் மர்மம் கேட்கும் உன்னிடம் நான் பேச எத்தனிக்கும் போதெல்லாம் இமைகளோ கூந்தலோ இடறி விழ வைத்து என் மொழியை ஊனமாக்கி என்னை மௌனமாக்கி மர்மம் நீடிக்க செய்கிறது
இப்போதெல்லாம் என் மொழி ஊனமாகவோ நான் ஊமையாகவோ உன்னை பற்றிய கவிதைகள் கால்கள் உடைந்தோ இருப்பதில்லை காரணம்
இருவர் கண்ணிலும்
இருந்த காதலுக்கு
இப்போது
பார்வை இல்லை !!!
இன்ப வலி
காதல் நிராகரிப்பின் இன்ப வலியை கண்ணீராகவோ கவிதையாகவோ வெளியேற்ற விரும்பாமல் வீழ்ந்து கிடந்தேன் படுக்கையில் .... என்னையறியாமல் என் கண்களில் நீர்... விசாரித்ததில் சிறகுகளை உடைத்து விட்டதற்காக என் கனவு அழுகிறதாம் !!!
நிறமற்ற அந்த உருவம் நிற்காமல் எங்கோ ஓடி கொண்டிருக்கிறது
நீர் போலவே அதற்கும் உருவமில்லை... முதல் வாக்கியம் பிழையே ! பிழையை பற்றியெல்லாம் அது கவலைப்படுவதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது !
நீர் போலவே இதற்கும் தமிழ் பெயர் கொடுத்து உயிர் கொடுத்தாலும் எல்லா மொழிகளின் உயிரோசை இதுவே ! இதை பற்றியெல்லாம் அது வாதம் செய்வதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது !
மேகமாய் மாறி மழையாய் பொழிந்து மீண்டும் நீராய் ஆவது போல் ...
உயிர் இனங்களின் உயிராய் மாறி மீண்டும் அதன் நிலைக்கே திரும்பும் இந்த உயிருக்கு காற்று என்று பெயர் !
மரங்கள் காற்றை அசைக்கிறதா காற்று மரங்களை அசைக்கிறதா இரண்டுமே சண்டையிட்டு இவ்வுலகை காக்கிறதா ?! இதை பற்றியெல்லாம் அது விளக்கம் கொடுப்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது !
அவ்வப்போது நின்றாலும் மீண்டும் ஓடுகிறது உயிர்களுக்கு உயிர் கொடுக்க காலத்திற்கு கால் கொடுக்க ஓடி கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் நொடிப்பொழுதும் இது நினைப்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது ! தன் கடமையை தானே செய்து கொண்டே இருக்கிறது !!!