Thursday, October 21, 2010

யார் கடவுள் ?!





விடுமுறையில் 
நகரத்து தோழியை 
என் கிராமத்துக்கு  
அழைத்து வந்தேன் 

கிராமத்து விருந்தோம்பலில் 
விக்கித்துதான் போனாள் 

வீதியில் விளையாடிய 
வயது வராத குழந்தைகள் 
வீட்டு வாசலில் வீற்றிந்த 
வயது போன குழந்தைகள் என 
வியாக்கானம் விசாரிப்புகளில் 
வார்த்தைகள் இல்லை அவளிடம் !

வாழ்த்துவது வழிபடுவது 
வீண் சம்ப்ரதாயங்கள் எனும் 
முற்போக்கு தோழி 
விருப்பம் கேட்டு 
விருந்து வைத்த என் தாயை 
விழுந்து விழுந்து பாராட்டினாள் !

வயிறார உண்டு 
காலாற நடக்க 
வாய்க்காலும் வரப்பும் 
வரவேற்றது தோழியை 

வரப்பில் நான் நடக்க 
வாய்க்கால் தண்ணீரில் 
விளையாடி நடந்தாள் அவள் ...

பசுமையின் நிறம் பார்த்து 
பரவசத்தோடு சொன்னேன் 
கடவுளின் காட்சியை பார்த்தாயா என்று 
யார் கடவுள் என்றாள் 

பெரியாரின் தாக்கமோ என்றேன் 
யாரும் தாக்கவில்லை 
அறிவின் தாக்கம் என்றாள் 

அப்போ பெரியார் என்றேன் 
அறிவித்த ஆசான் என்றாள் 
அப்போ கல்வி அறிவை தரவில்லையா என்றேன் 

கல்வி மட்டுமே அறிவை தராது 
உதாரணம் 
ஏட்டை படித்த நீ 
கேள்வி கேட்கிறாய் 
பெரியாரை படித்த நான் 
பதில் சொல்கிறேன் 
என்றாள் புன்முறுவலோடு

அப்படியெல்லாம் சொல்லாதே
அறிவின் விடைதானே கேள்வி என்றேன் 
அறிவே கல்வியின் தொடக்கம் என்றாள் 

அப்படியென்றால் 
கடவுள் இல்லவே இல்லையா ? என்றேன் 
ராமர் பிறந்தது உண்மையா என்றாள் 

சிரித்தேன் சிரித்தாள்....
ஆக முன்னோர்தான் கடவுளா என்றேன் 
எனக்கு முன்னோர் உனக்கு கடவுள் என்றாள் 

அப்போ பெரியாரும் கடவுளும் ஒன்றா என்றேன் 
எனக்கு பெரியார் முன்னவர் 
உனக்கு கடவுள் முன்னவர் என்றாள் 

பாதி தூரம் சென்றிருப்போம் 
பாதையின் எதிரே பாம்பு 

வளைந்து வந்த நாகம் 
நேரே படமெடுத்தது ...
இரு கை கூப்பி 
இறைவனை வேண்டினேன்

இடது கை பிடித்து இழுத்தவள் 
வேகமாய்  நடந்தாள் 
வேறு பாதையில் ...

விருப்பங்களுடன் பயணிக்கிறேன் 
வாழ்க்கையின் வேறு பாதையில் ...!