Wednesday, June 1, 2011

வலிகளோடு வாழ் !!!







நீ என்னை
மிதிக்கும்பொழுது
ஈழத்தில் இறந்து போன
இதயங்களின் வலி !


உன் தேவை முடிந்ததும்
என்னை உதறி செல்கையில்
தாசி கருவின்
தவிப்பின் வலி !


என்னை கொண்டு
பூமியை மிதிக்கையில் 
மகன்களால் புறக்கணிக்கப்பட்ட
தாயின் வலி !


வலிகளின் கோபம்
என்னுள் இருந்தும்
எதுவும் செய்ய
இயலாத நான்
அவ்வப்போது கோபத்தில்
கடித்து பார்த்தும்
நீ கண்டுகொள்ளாமல்
கடந்து செல்லும் வலி !


வலிகள் தாங்காமல்
விம்மி அழுதும்
கண்ணீர் வரமறுக்க ...
என் நிலைமைகண்டு
இயற்கை மழையாய்
அழுதிடும் சத்தத்தில்
இந்த அடிமையின்
குரல் யாருக்கும்
கேட்காமலேயே 
போய்விடும் வலி !


வலிகளின் விரக்தியால்
என் காதுகளை பிய்த்துகொண்டு
கானலோரம் கிடக்கும்
என்னை எல்லோரும்
ஏளனமாய் விளிக்கிறார்கள்
யாருக்கும் பயன்படா
பிய்ந்த செருப்பு என்று !!!



Monday, May 16, 2011

மரங்களும் மழையும் !!!


மனிதர்கள் அற்ற 
மாலைப் பொழுதில் 
மழையும் மரங்களும்
மழலையாய் உரையாடுவதில் 
மனது லயித்து 
மரம் கொத்துவதை 
மறந்து கேட்கிறது 
மரங்கொத்திக் குருவி !

கண்ணில் பசியோடு 
காட்டுக்குள் வரும் 
காளையர் இருவர் 
மரங்களின் உடலை 
வெட்ட ஆரம்பிக்க...
மரத்தை மீண்டும்
கொத்த ஆரம்பிக்கிறது
குருவி !
தங்கள் உரையாடலை 
நிறுத்தி  விடுகிறது 
மழையும் மரங்களும்... !!!


வலி

வேலை தேடி
விரக்தியின் விளிம்பில்
வெயிலின் அனலில் 
வியர்வையில்  நடக்கையில் 
பசுமையான உடலால் 
வெயில் தாங்கி
நிழல் தரும்  மரம் 
உணர்த்துகிறது 
குடும்ப பாரம் 
தாங்கும் 
தந்தையின் வலியை !!!


Thursday, April 21, 2011

குழந்தை !!!


கருப்பு இரவுகளில் 
வெள்ளை மையினால் 
உன் மீது 
ஆசையாய் எழுதிய 
சில எழுத்துகள் 
தானாகவே அழிந்தன ..
சில சிறுகதையாய்
வடிவம் பெற்றன..!

முகத்தில் ஆசையாய் 
சிறுநீர் தெளித்த 
சிறுகதையும் உண்டு 
கழுத்தில் மீசையாய்
மாலை அணிவித்த 
சிறுகதையும் உண்டு !

புகழ் புயலாய் 
முகத்தில் அடிக்க 
ஆனந்த வலியில்
நான் அழ 
உன் கண்ணிலும் நீர் !
கதையும் கரு 
உன்னுடையதே என்று 
உன் கண்ணீர் துடைக்க ..
நீ ஆனந்த கண்ணீர் என்க..
இருவரும் முகத்திலும் 
மகிழ்ச்சி பொங்க...
நம் அன்பு
விளையாட்டை 
ஆசையாய் பார்த்து 
சிரிக்கிறது சிறுகதை
நம் சிறுகதை !!!



Friday, April 15, 2011

தோல்வி !!!


தோல்வியின் வெற்றி !!!

உன்
ஒவ்வொரு அசைவையும்
ஒவ்வொரு கவிதையாய்
காகித வீதியில்
கடை விறிக்க
கை எடுக்கும் போதெல்லாம்
வார்த்தைகள்
வழுக்கி வாய்க்குள்ளேயே
விழுந்து விடுகிறது
உன் வில்லிடை அசைவில் !


என் மௌனத்தின்
மர்மம் கேட்கும்
உன்னிடம்
நான் பேச
எத்தனிக்கும் போதெல்லாம்
இமைகளோ கூந்தலோ
இடறி விழ வைத்து
என் மொழியை ஊனமாக்கி
என்னை மௌனமாக்கி
மர்மம் நீடிக்க செய்கிறது


இப்போதெல்லாம்
என் மொழி ஊனமாகவோ
நான் ஊமையாகவோ 
உன்னை பற்றிய கவிதைகள்
கால்கள் உடைந்தோ
இருப்பதில்லை
காரணம்
இருவர் கண்ணிலும் 
இருந்த காதலுக்கு 
இப்போது
பார்வை இல்லை !!!


இன்ப வலி

காதல் நிராகரிப்பின்
இன்ப வலியை
கண்ணீராகவோ
கவிதையாகவோ 
வெளியேற்ற 
விரும்பாமல் 
வீழ்ந்து கிடந்தேன் 
படுக்கையில் ....
என்னையறியாமல் 
என் கண்களில் 
நீர்...
விசாரித்ததில் 
சிறகுகளை 
உடைத்து விட்டதற்காக 
என் கனவு அழுகிறதாம் !!!



Friday, April 8, 2011

கடமை !!!


ஓர் உருவம் நீர் போலவே 
ஓடி கொண்டிருக்கிறது 
நிறமற்ற அந்த உருவம் 
நிற்காமல் எங்கோ 
ஓடி கொண்டிருக்கிறது 

நீர் போலவே 
அதற்கும் உருவமில்லை...
முதல் வாக்கியம் பிழையே !
பிழையை பற்றியெல்லாம் 
அது கவலைப்படுவதில்லை 
ஓடிக்கொண்டே இருக்கிறது !

நீர் போலவே 
இதற்கும் தமிழ் 
பெயர் கொடுத்து 
உயிர் கொடுத்தாலும் 
எல்லா மொழிகளின் 
உயிரோசை இதுவே !
இதை பற்றியெல்லாம் 
அது வாதம் செய்வதில்லை 
ஓடிக்கொண்டே இருக்கிறது !

மேகமாய் மாறி 
மழையாய் பொழிந்து
மீண்டும் நீராய் 
ஆவது போல் ...

உயிர் இனங்களின் 
உயிராய் மாறி 
மீண்டும் அதன் 
நிலைக்கே திரும்பும் 
இந்த உயிருக்கு 
காற்று என்று பெயர் !

மரங்கள் காற்றை அசைக்கிறதா 
காற்று மரங்களை அசைக்கிறதா 
இரண்டுமே சண்டையிட்டு 
இவ்வுலகை காக்கிறதா ?!
இதை பற்றியெல்லாம் 
அது விளக்கம் கொடுப்பதில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறது !

அவ்வப்போது நின்றாலும் 
மீண்டும் ஓடுகிறது 
உயிர்களுக்கு உயிர் கொடுக்க 
காலத்திற்கு கால் கொடுக்க
ஓடி கொண்டிருக்க வேண்டும் 
என்றெல்லாம் நொடிப்பொழுதும் 
இது நினைப்பதில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறது !
தன் கடமையை தானே 
செய்து கொண்டே இருக்கிறது !!!


காற்று
தன் கடமையைத் தானே 
செய்து கொண்டே இருக்கிறது !!!


Friday, April 1, 2011

நேசம் !!!


என்னோடு பிறந்தவன் 

என்னோடு இருப்பவன் 

சிலநேரங்களில் விலகுவான் 

மீண்டும் சேர்வான் 

நான் சிரிக்கும்பொழுது 

அவன் சிரித்ததில்லை 

 நான் அழும்பொழுது 

அவன் அழுததில்லை 

வேறுபாடு இருப்பினும் 

என்னைவிட்டு விலகியதில்லை 

அதற்காகவே அவனை 

நான் நேசிக்கிறேன் 

அவனும் என்னை 

உயிராகவே பாவிக்கிறான் 

என்னுடன் அந்த நண்பனையும் 

கொல்ல போகும் 

என் இறப்பை 

நினைக்கையில் எனக்கு 

எரிச்சலே மிச்சம் !

 என்னுடன் என் நிழலையும் 

கொல்லும் அளவிற்கு 

இறப்பின் கோரம் 

இருக்க காரணம் 

நான் என் நண்பனாம் 

என் நிழலை 

நேசித்த அளவு 

என் இறப்பை 

நேசிக்கவில்லை என்பதே  !!!

Friday, March 25, 2011

சமத்துவச் சோதனை



ஆணும் பெண்ணும் 

சரிநிகர் என்னும் 

சமத்துவச் சோதனையில் 

ஆணாதிக்க வல்லமையோடு ...

அவள் மார்பு அகற்றி 

அந்தரங்க உறுப்பு மாற்றி 

தலைமுடி வெட்டப்பட்டு 

பார்க்கையில் 

அந்த கண்களில்

இடையின் நளினத்தில்  

"அவள்" தெரிந்தாள்

மூலம் யோசித்து 

மூளை இதயம் 

இரண்டும் 

என்னிடம் இருந்து  

இடம் மாற்றியும் 

"அவள்" அங்கே இருந்தாள்.

ஆம்,
பிழை நேர்ந்துவிட்டது 

இடம் மாற்றும்முன் 

காதல்வழி அவள் 

என்னுள் இறங்கி விட்டாள் !!!

என்னை வென்று  விட்டாள் !!!